கும்பகோணத்திற்கு மேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காவதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்தலம் 'திருவேரகம்' என்றும் அழைக்கப்படுகிறது. முருகப்பெருமான் தம் தந்தையான சிவபெருமானுக்கே குருவாக இருந்து பிரணவ மந்திரத்தின் பொருள் கூறி விளக்கியதால் இத்தலம் சுவாமிமலை என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் முருகப்பெருமான் தன் வேலாயுதத்தால் தோற்றுவித்த தீர்த்தம் உள்ளது. இது வஜ்ஜிர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நன்னீராலேயே சுவாமிநாதனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
மூலவரைத் தரிசிக்க 60 படிகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். இந்தப் படிகள் அறுபது தமிழ் ஆண்டுகளைக் குறிக்கும். இங்கு முருகப்பெருமான் தமது வலக்கரத்தில் திருத்தண்டம் தாங்கி இடது கரத்தை இடுப்பில் அமர்த்தி சிரசில் ஊர்த்துவ சிகமுடியும், திருமார்பில் முப்புரிநூலும், உருத்திராட்சமும் அணிந்து குருநாதனாகக் காட்சி அளிக்கிறார். |